செவ்வாய், 23 ஜனவரி, 2024

ராமர் கோவில் ஆதாரங்கள்


பா.இந்துவன் கட்டுரை,,

**********

ராம் ஜென்ம பூமியின் “இராமர் கோவிலின்” தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் தான் நீதிமன்றம் வழங்கியதா? ஒரு சிறிய அலசல்!!!

ஜென்மஸ்தான் என்றால் பிறப்பிடம் என்று பொருள். மசூதியைச் சுற்றி இருந்த பகுதியை காலம் காலமாக “ஜென்மஸ்தான்” என்றே அழைத்தார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இராமர் பிறந்த அந்த இடத்தை  ஜென்மஸ்தான் என்று அழைத்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. பாபரின் ஆட்சி காலத்திற்கு பிறகு ராமர்கோவில் இடிப்பிற்கு எதிராக ராஜா மெகதீர், ராணி அகல்யாபாய், ஜெயராஜ் கன்வர், மன்னர் தேவேந்திர பாண்டே என்று பலர் முகலாயர்களுடன் போரிட்டனர். 1853 ஆம் ஆண்டு இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்றான “நிர்மோகி அகோரா” எனும் பிரிவினர் மசூதிக்குள் நுழைய முயற்சித்ததாக ஒரு நிகழ்வு பதிவாகி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1855ஆம் ஆண்டு மசூதியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மசூதி இருந்த பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு இரு தரப்பினரும் வழிபட அனுமதிக்கப்பட்டது.

(1530 முதல் ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப், முகமது ஆசம் ஷா, முகமது பகதூர் ஷா ஆரம்பித்து அபு ஜாபர் சிராஜுதீன் முகம்மது என்கிற இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் ஆரம்பித்து 1857 வரை முகலாயர்களின் ஆட்சி நடந்திருக்கிறது எனில் இத்தனை ஆண்டுகாலமும் போராடிக் கொண்டிருந்தோம் என்றுதான் கூறவேண்டும்.)

1855 ல் மசூதி இருக்கும் இடத்தில் சுவர் எழுப்பி ராமர் கோவில் கட்டி வழிபட நீதிமன்றத்தில் இந்து துறவியால் அனுமதி கேட்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நள்ளிரவில் அங்கே ராமர் சீத்தாவின் திருவுருவம் வைக்கப்படுகிறது. இதை சுதந்திரம் வாங்கும் தினத்திற்காக காத்திருந்து திட்டமிட்டு செய்ததாகவேத் தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து 1992 டிசம்பர் 6 மசூதி இடிக்கப்படுகிறது. இதன் பின் விஸ்வரூபம் எடுத்த இந்த வழக்கானது 2010ல் 2:1 என்ற விகிதத்தில் ஒருவர் 2.77 ஏக்கர் ராம் லல்லாவிற்கே (ராமர் குழந்தை) சொந்தம் என்றும், மற்ற இருவர் மூன்று பேருக்கும் சொந்தம் என்றும் (அதாவது நார்மோகி அகோரா, ராம் லல்லா, பாபர்) தீர்ப்பை அளித்தது நீதிமன்றம். அதன்பின் 2019ல் 2.77 ஏக்கரும் “ராம் லல்லாவிற்கே” சொந்தம் என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பை அளித்தனர்.

இந்த விவாதங்களுக்கு இடையில் இந்த மசூதி பாபருக்கு சொந்தமானது/பாபர்தான் கட்டினார் என்பதற்கு மூன்று கல்வெட்டுகள் இஸ்லாமியர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இவைதான் முதன்மையான ஆதாரம். இவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த கல்வெட்டுகள் உண்மை என நிரூபித்திருந்தால் பாபர் மசூதி மீதான தீர்ப்பு அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளாக இந்த கல்வெட்டுகளை நீதிமன்றம் பார்த்தது. ஆனால் எதிர்தரப்பு இந்த கல்வெட்டுகளில் உண்மைத்தன்மை இல்லை என்று வாதிட்டு வெற்றியும் கண்டது.

இந்த கல்வெட்டின் முதல் ப்ரதி 1899 ஆம் ஆண்டு “Fuhrer” என்பவரால் எழுதப்பட்ட “The Sharqi Architecture of Jaunpur with notes on Zafarabad, Sahet-Mahet and other places in the Northern-Western Provinces and Oudh” என்ற நூலில் இடம்பெற்றிருந்ததை 1994 ஆம் ஆண்டு ASI மறு பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. இதில் அத்யாயம் X ல் XL,XLI,XLII என்ற தலைப்பின் கீழ் இந்த கல்வெட்டுகள் இடம்பெற்றிருந்தன. இந்த கல்வெட்டுகள்தான் பாபர் மசூதி அயோத்தியில் பாபரால் கட்டப்பட்டது என்ற  Fuhrer ன் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றிருந்தது. மொழிபெயர்ப்பிற்கு பின்பு Fuhrer மசூதி பற்றி குறிப்பிடுகையில் ஜென்மஸ்தானில் இருந்த பழைய ராமர் கோவிலின் பகுதிகளைக்கொண்டே இந்த மசூதி கட்டப்பட்டது. இந்த பகுதிகள் வலுவான கருப்பு நிறத்தில் ஏழு முதல் 8 அடி வரை உள்ள தூண்களால்தான் கட்டப்பட்டது என்ற தகவல்களைக் குறிப்பிடுவதை வழக்கறிஞர் மிஸ்ரா எடுத்துக் கூறினார். மேலும்,

இந்த கல்வெட்டைப் பற்றிய குறிப்புகளை எடுக்க காரணமான Fuhrer ன் மொழிபெயர்ப்பின் மூலமும், பாபர் நாமாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இதே கல்வெட்டைப்பற்றிய  Beveridge ன் மேற்கோள்களும் துளியளவும் ஒத்துப்போகவில்லை.  ஆம், இந்த கல்வெட்டுகளைக் குறிப்பிட்டுதான் இதுபற்றிய தனது பார்வையுயும் பதிவு செய்திருக்கிறார் பாபர் நாமாவின் மொழிபெயர்ப்பாளர் Beveidge. மேலும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலத்தில் பாபர் அயோத்தியிலேயே இல்லை என்பதும், கல்வெட்டின் இரண்டு மொழிபெயர்ப்பிற்கும் பெருமளவு கால வித்யாசம் இருந்ததும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தின. Beveridge ன் உரையைப் பொறுத்தவரை அவர் அசல் உரையைப் பார்க்கவில்லை அல்லது கல்வெட்டுகளின் உரையை அவரே மொழிபெயர்க்கவில்லை என்பதாகவும் நீதிமன்றம் கருதியது. 

பைசாபாத் துணை ஆணையரிடமிருந்து Beveridge தனது மனைவி மூலம் இந்த கல்வெட்டுகளின் உரையைப் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். காலனித்துவ அரசாங்கத்தில் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த தனது மனைவியால் கடிதப் பரிமாற்றம் மூலம் தனக்கு உரையின் நகலைப் பெற்றதாக Beveridge குறிப்பிடுகிறார். Beveridge கல்வெட்டின் உரையில் சில சிறிய மாற்றங்களை" செய்ததாக அவரே கூறுகிறார். Beveridge என்ன மாற்றங்களைச் செய்தார் என்பதை அவர் அவரின் உரையில் விளக்கத் தவறியுள்ளார். அவரின் கூற்றுப்படி, முதல் இரண்டு கல்வெட்டுகளின் உரை முழுமையடையாததாக இருந்தது என்பதும் அவை படிக்கக்கூடியதாக இல்லை என்பதும் தெளிவாகிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பறகு நீதிபதி எஸ்.யு.கான் கூறியதாவது, மசூதி யாருடைய உத்தரவின் கீழ் கட்டப்பட்டதோ அந்த நிலம் பாபருக்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்களால் நிரூபிக்க முடியவில்லை. மேலும், Fuhrer மற்றும் Beveridge மற்றும் இசட் ஏ தேசாய் மொழிபெயர்த்துள்ள மசூதியில் உள்ள கல்வெட்டுகள் உண்மையானவை அல்ல என்றும், இந்தக் கல்வெட்டுகளின் அடிப்படையில் மட்டும் “சர்ச்சைக்குரிய கட்டிடம்” கட்டப்பட்டது என்று கூற முடியாது என்றும் நீதிபதி கூறினார். ஆகவே பாபர்தான் மசூதியைக் கட்டினார் அல்லது அவரின் ஆணைக்கு இணங்கத்தான் கட்டப்பட்டது என்று நிறுவுவதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை என்று கூறினர். கிடைத்த தகவலின்படி 1659 முதல் 1707 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அதாவது ஔரங்கசீப்பின் ஆட்சியின் போதுதான் இந்த மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.

தொல்லியல் சான்றுகளும், தொல்லியல் அறிஞர்களின் பார்வையும் : 

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பி.பி லால் என்ற தொல்லியலாளர் தலைமையில் மசூதியை அகழாய்வு செய்து நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் மசூதிக்கு அடியில் கோவில் தூண்கள் உட்பட ஒரு பெரிய கட்டிடம் இருந்ததை கண்டுபிடித்தார்கள். இதை இடதுசாரி தலைவர்கள் மறுத்து விமர்ச்சனம் செய்ததும் பி.பி லால் தலைமையில் இருந்த தொல்லியல் துறையினருடன் பணி செய்த ஒரே ஒரு முஸ்லிமான கே.கே முகமது இடதுசாரி தலைவர்களின் கூற்றை மறுத்தார். பின் அங்கே நடத்திய அகழாய்வின்போது கிடைத்த ராமாயண காட்சிகள், இராவணன் சீதையை தூக்கிச்செல்லும் நிகழ்வு, அனுமன் சீதையிடம் கொடுத்த மோதிரம் அடங்கிய சிற்பங்கள், கறுப்புக் கல்லால் செதுக்கிய 14 கோவில் தூண்கள், பூர்ண கலசம், இரண்டாவது அகழ்வில் 50 க்கும் மேற்பட்ட தூண்கள், அரசர்களின் சிற்பங்கள், உடைந்த சிற்பங்களின் கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதிகள், ஆண்கள் பெண்கள் என்று பல சிற்பங்கள், மகர பிரணாலா எனப்படும் அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பு, கீழே செல்லச் செல்ல கோவில் சுவர்கள் போன்றவை கிடைத்ததை புகைப்படம் மற்றும் காணொலி வாயிலாகவும் பதிவு செய்தனர்.

மேலும் 20 வரிகள் அடங்கிய, வாலி மற்றும் பத்து தலை அரக்கனான ராவணனை வதம் செய்த விஷ்ணுவிற்காக அற்பணிக்கப்பட்டது இந்த கோவில் என்ற வாசகத்துடன் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டானது கரசேவைக்குப் பின் கிடைத்ததால் பல விவாதங்களுக்குப்பின் வாதி, பிரதிவாதி மற்றும் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. மிக முக்கியமாக மசூதிக்கு அடியில் கிடைத்த பொருட்களில் 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இராவணன், சீதா, அனுமன், மோதிரம், பூர்ண கலசம், அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பு  போன்றவை மசூதிக்கு அடியில் கோவில் தான் இருந்தது என்று இஸ்லாமியரான கே.கே முகமது தொல்லியல் சான்றுகளின் மூலம் அடித்துக் கூறினார். இது இந்துக்களுக்குச் சொந்தமானது என்றும் நமக்கு மெக்காவைப்போல் இது இந்துக்களுக்குப் புனிதமான கோவில் என்றும் தொல்லியல் சான்றுகள் கே.கே முகமதுவை வாதிட வைத்தது. ஏனெனில் இஸ்லாமிய முறைப்படி இவ்வளவு கோவில் பொருட்களுக்கு மேல் மசூதி கட்டினால் அது ஹராம் என்பதில் அவர் உறுதுயாக இருந்தார். இந்த பொருட்கள் பௌத்த ஜைன கோவில்களாக இருக்கலாம் என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது 2003  ஆம் ஆண்டு மசூதிக்கு அடியில் அகழ்வாராய்ச்சி நடத்திய “ஹரி மாஞ்சியே” ஒரு பெளத்தர் தான். அங்கிருந்தது எதுவும் பெளத்த ஜைனோகிராபி இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இறுதியாக அவர் கூறியதாவது அகழ்வாய்வின் போது 3 -4 மாதங்கள் அங்கேயே தங்கி இருந்து மசூதியைச் சுற்றி நடப்பவற்றைத் தெளிவாகப் பார்த்திருக்கிறேன். தினமும் நுற்றுக்கணக்கான இந்துக்கள் வந்து மசூதி இருந்த இடத்தை சுற்றி வழிபட்டு செல்வதையும், மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் கூட பார்த்திருக்கிறேன். அதனால் தான் இஸ்லாமியர்கள், மெக்கா, மதீனாவில் வழிபடுவது போன்று இது இந்துக்களுக்கான புனிதமான இடம் என்பதால் இஸ்லாமியர்கள் மனமுவந்து நிலத்தை விட்டுக்கொடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதினேன் என்றதோடு அதனை நான் மனப்பூர்வமாக என் சகோதர இஸ்லாமியர்களிடம் கோருவேன் என்றும் பாரதிய இஸ்லாமியர்கள் அதை மனமுவந்தும் செய்வார்கள் என்று நம்பிக்கையும் கொண்டிருந்தார். மேலும் மசூதிக்கு கீழ் இராமனுக்கு ஆலயம் இருந்தது என்பதும், அது இந்துக்களின் புனித பூமிதான் என்பதும், நான் அகழ்வாய்வில் கண்டடைந்த உண்மை என்பதால் அதை எதற்கும் ஈடாக விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். இரண்டாம் கட்ட அகழ்வின்போது 131 தொல்லியலாளர்களில் 52 முஸ்லிம் தொல்லியல் அறிஞர்களும் இருந்தனர்.

இந்த வழக்கில் அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததாக இந்துக்கள் தரப்பில் வைக்கப்பட்ட சான்றுகளில் சில..

1. 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அயோத்யா மகாத்மியம் என்ற நூல்.

2. 1631 ஆம் ஆண்டு அயோத்தியில் இடிபாடுகளுடன் கூடிய ராமர்கோவில்/கோட்டை/ அரண்மனை இருந்ததை Joannes De Laets (Director of dutch east india company) என்பவர் தெளிவாக பதிவு செய்துள்ளார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ராமனை வந்து வழிபட்டுச் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

3. 1634 ஆம் ஆண்டு தாமஸ் ஹெர்போர்ட் என்ற பயணியும் அங்கே வழிபாட்டுஸ்தலம் இருந்ததை பதிவு செய்கிறார்.

4. Joshep tieffenthalers என்ற பாதிரியார் 1742ல் அயோத்தி வந்து இங்கே ஔரங்கசீப் ராமர்கோவிலை இடித்து மூன்று குமிள் போன்ற அமைப்புடன் கூடிய மசூதியைக் கட்டியதாகவும், சிலர் பாபர் கட்டினார் என கூறுவதாகவும், இடிபாடுகளுக்கு இடையே அனுமன் கோவில், ராமர் மற்றும் அவர் சகோதரர்கள் பிறந்த இடம் இதுதான் என்று இந்துக்கள் நம்பி வழிபடுவதாகவும் தனது நூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

5. 1801 ல் பிரஞ்ச் அறிஞர் C. Mentelles அயோத்யா என்ற பெயருடைய இந்த நகரத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ராமர் கோவில்இருந்ததாகவும், மக்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டதாகவும், ஔரங்கசீப்பால் இது இடிக்கப்பட்டது என்பதையும் பதிவுசெய்துள்ளார்.

6. இஸ்லாமியர் தரப்பில் 1858ல் முதல் வழக்கு பதிவுசெய்தபோது மஸ்ஜித் ஜென்மஸ்தான் என்றே பதிவு செய்திள்ளனர்.

7. அங்கே குழந்தை ராமர் கோவில் இருந்ததை சீக்கிய குருமார்களில் முதல்வரான குருநானக் (1510 - 1511) போன்ற காலகட்டத்தில் அயோத்தி சென்று குழந்தை இராமரை வழிபட்ட ஆவணக் குறிப்புகளை தீர்ப்பானது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

8. காளிதாசரின் பாடல்களும் ராமர் கோவிலைப் பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.

- பா இந்துவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக