செவ்வாய், 24 ஜனவரி, 2023

சோழதேசம் பூம்புகார் தொண்மை,,


" மீண்டெழும் தமிழர் வரலாறு "

குமரி கடல் அகழாய்வும் பூம்புகார் கடல் அகழாய்வும் தமிழர் வரலாற்றின் ஆகப்பெரும் பழமைக்குச் சான்றாவணம்.

இவ்வாய்வு குறித்து எத்தனையோ கேலி பகடிகளுக்கு ஆட்பட்டாலும்
ஆகச் சிறந்த அறிஞர்கள் 
இவ்விரண்டு ஆய்வுகளையும் முன்னெடுத்தே வருகின்றனர்.

குமரி கடல் அகழாய்வு வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.

பூம்புகார் கடல் ஆய்வு ஒரு சிறப்பான முன்னேற்றம் கண்டது.  கடலுக்கடியில் உள்ள ஒரு பழந்தமிழர் துறைமுகம் ஒன்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.

இம்மகத்தான பணியை திறம்பட செய்தவர் பேராசிரியர் திரு. S.m.இராமசாமி அவர்கள்.

பூமியை துளைத்து வெளிவந்த கீழடியைப் போல்.. கடலில் இருந்து ஒரு நகரம் வெளிப்பட இருக்கிறது. 

இந்த ஆய்வு தமிழர் பழம்பெருமை வரலாற்றின் அடுத்தகட்ட நகர்வு என்பதில் ஐயமில்லை.

ஆய்வு விபரங்களை நமக்களித்த பேராசிரியர் சரவணவேல் அவர்களுக்கும்.. 
திரு ஒரிஸா பாலு அவர்களுக்கும் நன்றிகள்.

இந்த ஆய்வு விபரம் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பேசுப்பொருளாகி உள்ளது..
                -----------------
"கடல் கீழ் பூம்புகாரின் கண்டுபிடிப்பும் அதன் வாழ்க்கை வரலாறும்....."

சோம . இராமசாமி
புகழ் மிகு பேராசிரியர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் பூம்புகார் ஆய்வுத்திட்டம் தொலை உணர்வுத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி -  .

உலகின் பல பகுதிகளிலும் பெருவாரியான நகரங்கள்
பல கடலோரப்பகுதிகளிலே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பண்டைய அரசுகளின் தலை நகரங்களாகவும், உயர்மட்டமக்களின் விடுமுறைத் தளங்களாகவும், விளையாட்டு மையங்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக பண்டைய துறைமுக நகரங்களாகவுமே விளங்கி இருந்து இருக்கின்றன. இவற்றில், இந்திய துணைக்கண்டத்தில் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்த துவாரகாவும். கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்த பூம்புகாரும் மிகத் தலைசிறந்த நகரங்களாக விளங்கி இருந்து இருக்கின்றன. இவற்றில் பூம்புகார் மிகத் தலைசிறந்த துறைமுகமாக விளங்கி கிழக்கே தொலைதூர தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் மேற்கே எகிப்து வரையிலும் கடல் சார் வணிகத்தொடர்பு கொண்டு இருந்து இருக்கின்றது. இப்பூம்புகார் நகரமானது சோழமன்னர்களால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போய் விட்டது. தலை சிறந்த தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் கடல் தேவதை கோபம் கொண்டு பெரிய அளவில் அலைகளை அனுப்பி அதனால் பூம்புகார் அழிந்தது என்று கூறியுள்ளது. இக்கூற்று இன்று வரை நம்பப்படுவதால், பூம்புகாரின் அழிவு பற்றி இதுகாறும் ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை.

அதற்கான இடங்கள் மற்றும் கால வரையறைகள். காவிப்பூம்பட்டினத்திலே சுமார் 1500 ஆண்டுகள் இருந்த காலக்கட்டத்தில்
இத்துறைமுக நகரில் ஏற்பட்ட பல்முனை பரிணாம வளர்ச்சிகள் மற்றும்  கடல் சார் வணிக சரித்திரத்திலே கோலோச்சிய பூம்புகார் நகரம் திடீர் என்று மறைந்து போனதற்கான காரணங்கள் ஆகியவை பெரும் மர்மமாகவே உள்ளன.

ஆகவே மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்
நுட்பத்துறையின் பல கோடி நிதி உதவியோடு, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தலைமையில் பல் துறை சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலமும், மற்றும் கடல் கீழ் பகுதிகள் GEBCO (ஜெப்கோ -பல் துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு) மற்றும் MBES (ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு) மூலம் ஆராயப்பட்டன. இவ்வாய்வில் வண்டல் பகுதியில் காவிரி நதி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே இருந்து வடக்காக நகர்ந்து கொள்ளிடத்தை அடைந்தது என்ற உண்மை வெளிக்கொணரப்பட்டது. ஜெப்கோ மூலம் நடத்திய முதற் கட்ட ஆய்வுகள் கடலுக்கு கீழே 40 கி. மீ தூரம் வரை மூன்று மிகப் பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி இருப்பது தெரிய வந்தது. அதிலிருந்து, கடற்கரை தற்காலக் கடற்கரையில் இருந்து சுமார் 40-50 கி.மீ. கிழக்காக இருந்து இருக்க வேண்டும் என்ற உண்மை  வெளிக்கொணரப்பட்டது.

ஆகவே தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ள சுமார் 1000 சதுர கி.மீ. களில் MBES சர்வே, தேசிய கடல் சார் தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த MBES சேகரித்த கடல் கீழ் தரை மட்டத்தின் தகவல்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட வகைகளில் கணிணி சார் செயல் ஆக்கம் செய்து ஆராயப்பட்டது. இவ்வாய்வில் பூம்புகார் பற்றிய வியத்தகு பல உண்மைகள் முதன் முறையாக வெளிக்கொணரப்பட்டன.

தற்காலக் கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பில் ஒரு துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துறைமுக நகரம் சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது...

இந்நகரத்தில் ஒரு துறைமுகம், அதன் அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள் அதைச்சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக்கொண்ட குடியிருப்புக்கள் மற்றும் கலங்கரை விளக்கமும் காணப்பட்டன.

இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும் கிழக்கு - மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது. இதில் வடக்கு - தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்கு வரத்துக்காகவும், குறுக்குக்கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும். இந்த கால்வாய்களுக்கு இடையே அகலமான மற்றும் உயரமான நிலப்பகுதிகள் இருக்கின்றன. இவை, சரக்குகளை ஏற்றி- இறக்கவும், சேமித்துவைக்கவும் பயன்படுத்துவதற்காக இருந்து இருக்கலாம். இந்த துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்கள் நிறுத்துவதற்காக சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு கப்பல் துறைகள் காணப்படுகின்றன. துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள் ஆகிய இரண்டுமே வடக்கு-தெற்காக காணப்படும் 40 கி.மீ. நீளமான மற்றும் 3-4 மீட்டர் உயரமான கடந்த கால பீச் மணல் மேடுகளுக்கு மேற்காக இருக்கின்றன. இதில் இருந்து துறைமுகத்தையும், கப்பல் தளங்களையும் அலைகளின் நேரடித்தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த இடத்தில் துறைமுகத்தையும் மற்றும் கப்பல் துறைகளையும் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மேலும் இத்துறைமுகத்தைச்சுற்றி பல இடங்களில் குடியிருப்புக்கள் தென் படுகின்றன. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற பீச் மணல் மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவர்கட்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் காணப்படுகின்றன. இதே போன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய, ஆனால் உள்ளே உள்ள கட்டிடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு உள்ளே உள்ள இந்த கலங்கரை விளக்கத்தை அடைவதற்காக கட்டிய பாலத்தின் அடியேயுள்ள தூண்களும், சுற்றுப்படிக்கட்டின் அடித் தூண்களும் தெளிவாக MBES படங்களிலே தென்படுகின்றன. இந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பு எகிப்தில் உள்ள கிளியோபட்ரா கலங்கரை விளக்கம் போலவும், மற்றும் 1100 ஆண்டுகட்கு முன்பு பராந்தக சோழன் வேதாரண்ணியம் கோடியக்கரையில் அமைத்த கலங்கரை விளக்கம் போலவும் தெரிகின்றது. ஆனால் இக்கலங்கரை விளக்கம் எல்லாவற்றிற்கும் காலத்தால் முந்தைய, சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

ஆக, கடலுக்கு கீழே டெல்டா-1ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூம்புகார் நகரம் சுமார் 15,000 ஆண்டுகட்கு முன்பு முதன் முதலாக அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் (பூம்புகார்-1) என்று தெரிகிறது. இதற்கு மேற்கே உள்ள டெல்டா-2 ல் பூம்புகார் நகரம் -2 ம்(12,000 ஆண்டுகள்), டெல்டா-3 ல் பூம்புகார் நகரம்-3ம் (10,000 ஆண்டுகள்) இருந்து இருப்பதற்கான அறிகுறிகள் தென் படுகின்றன.

மேலும் GEBCO படங்களும், MBES படங்களும் மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் -1 ற்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே, காவிரியும் அதன் கிளைநதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளும், பெரிய நீர் வீழ்ச்சியும், அதன் கீழ் கடல் பள்ளத்தாக்குகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம், புயல் எழுச்சி ஆகியவற்றிற்கு பாதைகளாக இருக்கின்ற காரணத்தால் இது போன்ற பேரிடர்கள் இடம் மாறி வந்த இந்த மூன்று பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இவை ஒரு புறம் இருக்க இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் மாயவரம் வரை கடல் இருந்ததற்கான தடயங்களாக வடக்கு-தெற்காக ஏழு கடந்த கால கடலோர பீச் மணல் மேடுகளைக் காண்பிக்கின்றது. இவற்றில் இருந்து கடல் மட்டம் உயரும் போது கொஞ்சம் கொஞ்சமாக கடல் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் மாயவரத்தை அடைந்து இருக்கிறது. பின்னர் கடல் கிழக்காக பின் வாங்கும் போது சீர்காழி (5000 ஆண்டுகள்), நாங்கூர் (3000 ஆண்டுகள்) ஆகிய பகுதியில் சில நூறு ஆண்டுகள் நிலைகொண்டு, அங்கு பீச் மணல் மேடுகளை உருவாக்கி, இறுதியாக தற்கால காவிரிபூம்பட்டினத்தை 2500 ஆண்டுகள் காலக்கட்டத்தில் அடைந்து இருக்கிறது. இப்பின்னணியில் பூம்புகார்-3ல் இருந்து மேற்கே தள்ளி கொண்டுவந்து கொட்டப்பட்ட பூம்புகார் உபகரணங்களை வைத்து பூம்புகார்-4 யை மாயவரத்திலும், பூம்புகார்-5 யை சீர்காழியிலும், பூம்புகார்-6 யை நாங்கூரிலும், பூம்புகார்-7 காவிரிபூம்பட்டினமாகவும் உருவாக்கி இருக்கக் கூடும். 

இவ்வாறு இந்த ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் பூம்புகார் 2500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்கட்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன் முதல் நிர்மானம் செய்யப்பட்டு பின்னர் கடல் மட்டம் உயரும் போதும், கடல் கோளினாலும் மூன்று இடங்களில் கடலுக்குள் மேற்காக இடம் மாறி, பின்னர் கடல் கோளின் போது மாயவரம் வரை தள்ளப்பட்டு, பின்னர், கடல் கிழக்காக பின் வாங்கும்போது மாயவரம், சீர்காழி, நாங்கூர் போன்ற மூன்று இடங்களில் இடம் மாறி இறுதியாக, ஏழாவதாக காவிரிபூம்பட்டினத்தை அடைந்து இருக்கிறது என்பது புலனாகிறது.

மேலும் பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை 
வடிவமைக்க சுமார் 12 நிறுவனங்களை இணைத்து இந்த ஆய்வு
 முழுமையாக வெளிக்கொணர உள்ளது.

இது இறுதியில் தமிழர்களின் வரலாற்றை
வெளிக்கொணர உள்ளது.

+++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக