சனி, 3 பிப்ரவரி, 2024

ஆதிசைவர் வரலாறு

****

ரிவ்யூ;

பொதுமக்களின் அறியாமையால் பாதிக்கப்பட்ட சமூகம் இருக்கும் என்றால் அது ஆதிசைவர் சமூகம்தான்.ஆதிசைவர் என்னும் சாதியை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் ஆயிரத்தில் ஒருவர் தெரியும் என்று கூறுவாரா என்பது சந்தேகம்தான்.

சைவ ஆகமங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்களில் மரபாக பூசை செய்யும் சாதியே ஆதிசைவர் என்பவர்கள்.உடனே ஐயர் அல்லது பிராமணர் என்று கூறவேண்டியதுதானே! அது என்ன புதிதாக ஆதிசைவர் என்று தெரியாத சொல் என்று கேட்கவும்கூடும்.

சைவ ஆகமக் கோயிலில் பூசை செய்யும் சாதியான ஆதிசைவர் வேறு பிராமணர்கள் வேறு என்பது பலருக்கும் தெரிவதில்லை.ஐயர் என்பது  பட்டம் அது பிராமணர்களுக்கும் உண்டு,ஆதிசைவர்களுக்கும் உண்டு.பிள்ளை,முதலி,கவுண்டர் போன்ற பல்வேறு சாதிகளிடையே காணப்படும் பட்டங்களை சாதிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொதுப்புத்தி ஐயர் என்பது பட்டம் என்று அறியாது இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.

பிராமணர்கள் வேள்விகள்,புரோகிதம் செய்பவர்கள்.கோயில்களில் பூசை செய்பவர்கள் கிடையாது.

காலனிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி கற்று அவர்களின் நிர்வாகத்தில் வேலைகளில் பெரும்பங்கைப் பெற்றவர்கள் பிராமணர்கள்.அவர்கள் கோயிலில் பூசை செய்வதில்லை பூசை செய்யும் சாதியான ஆதிசைவரை மதித்ததுமில்லை என்பது பொதுப் புத்திக்கு தெரியாதது.

பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணன் என்ற பொதுப்புத்தி கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய சமூகமான ஆதிசைவர்களையும் பிராமணர்களையும் ஒன்றாகக் கருதி அவர்கள் மீதும் வெறுப்புக் கக்கியது.கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பூசகருக்கு தட்டில் குருதட்சணையாகப் பணத்தை வைப்பார்கள்.அவர்களையும் பிராமணர்களையும் ஒன்றாக மயங்கி பிராமணன் மீதான கோபத்தினை வெளிக்காட்ட தட்டில் பிச்சை எடுக்கும் உனக்கு இவ்வளவு திமிரா என்று திட்டுவதை முகநூலில் காணாதவர்கள் உண்டா!

தில்லை கார்த்திகேய சிவம் எழுதிய ஆதிசைவர்கள் வரலாறு ஆதிசைவர் குறித்து வெளிவந்துள்ள முக்கியமான நூல்.ஆதிசைவர் யார் என்பதிலிருந்து அவர்களின் இன்றைய நிலைவரை படம் பிடித்துக் காட்டும் நல்லதோர் ஆவணமாக இந்த நூல் இருக்கிறது.

ஆதிசைவ சமூகத்தைச் சேர்ந்த தில்லை கார்த்திகேய சிவம் அருமையாக பல்வேறு ஆதாரங்களுடன் ஓர் ஆய்வுக்கட்டுரை போன்று இந்த நூலை எழுதியுள்ளார்.அதேவேளை அவரது தமிழ்நடை சொல்ல வந்த விடயங்களை இலகுவாகப் புரியக் கூடியதாகவும் வாசிப்பு இன்பத்தை கொண்டதாகவும் அமைந்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

ஆதிசைவர் தமிழர் என்பதை மலைபோன்று அசையாத உறுதியுடன் தில்லையார் இந்த நூலில் பதிவு செய்கிறார்.அருமையான இந்த நூலின் நிறைகளை கூறிக்கொண்டே போகலாம். 

அதேவேளை இந்த நூலில் உள்ள சில கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமானது.
 
சிவபெருமான் சதாசிவமூர்த்தியாகத் திருவுருவம் கொண்டு ஈசானம்,தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,சத்யோஜாதம் என்னும் ஐந்து முகங்களில் இருந்து கௌசிகர்,காசியப்பர்,பரத்வாஜர்,கௌதமர், அகத்தியர் ஆகிய ஐந்து முனிவர்களைத் தோற்றுவித்தார்.அவர்களின் வழிவந்தோரே ஆதிசைவர் என்கிறார்.

இதில் ஐந்து முகங்களில் இருந்து தோன்றினர் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையையே சிதைத்துவிடும்.சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சற்காரிய வாதப்படி உள்ளத்தில் இருந்தே உள்ளது தோன்றும்.ஆதிசைவர் சிவபெருமானின் முகங்களில் இருந்து உருவானவர் என்றால் பிறப்பு இறப்புக்கு உட்படும் அவர்களின் தன்மையை சிவபெருமானும் கொண்டிருப்பார் என்று ஆகிவிடும்.எனவே அதை சிவபெருமானின் ஐந்து முகங்களால் தீட்சிக்கப்பெற்ற ஐந்து முனிவர்களின் வழிவந்தவர்கள் ஆதிசைவர்கள் என்பதே சரியானது.

பிராமணர்கள் பிரம்மனின் முகத்தில் உதித்த வேதவேதியர்கள்.ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவபெருமானுடைய திருமுகத்தில் இருந்து தோன்றியவர்கள்.இருவரது வாழ்வியலும்,வழிபாட்டு முறைகளும் வேறுபட்டவை.கோயில் அர்ச்சகத் தொழிலுக்கு உரிமை உடையவர்கள் ஆதிசைவர்கள்.வேதத்துக்கு முதன்மை கொடுப்பவர்கள் பிராமணர்கள்.ஆகமத்துக்கு முதன்மை கொடுப்பவர்கள் ஆதிசைவர்கள்.பிராமணர்களும் ஆதிசைவர்களும் ஒன்றாக உணவருந்துவதோ திருமணம் செய்வதோ கிடையாது.ஆதிசைவர்களின் கோத்திரங்கள்,சூத்திரங்களுக்கும் பிராமணர்களின் கோத்திரங்கள்,சூத்திரங்களுக்கும் ஆழ்ந்த வேறுபாடு உண்டு என்பதை வலியுறுத்தும் அவர், பிராமணர்கள் போன்று ஆதிசைவர் உருவத்தில் ஒன்றுபோல் காணப்பட்டாலும் என்று குறிப்பிட்டுச் செல்வது அவரின் ஆதிசைவர் தமிழரே என்ற அறைகூவலுக்கும்,பிரத்தியட்சப் பிரமாணமாகிய கண்ணால் காண்பதற்கும் முரணானதாகும்.பெரும்பாலான ஆதிசைவர் ஏனைய தமிழ்க் குடிகளின் தோற்றத்தையும் நிறத்தையுமே கொண்டுள்ளனர். 

சிவபரத்துவத்தைக் கொண்ட ஆதிசைவர்களுக்கும் ஏகான்மவாதக்கொள்கை கொண்ட பிராமணர்களுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்கூட மோதல்கள் இருந்தன,இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிராமணர் பிராமணர் அல்லாதார் போராட்டமே ஆதிசைவர்களை பிராமணர்களுடன் இணைந்து நிற்கச் செய்தது என்பதைக் குறிப்பிடும் தில்லை கார்த்திகேய சிவம் இந்த இக்கட்டான நேரத்தில் ஆதிசைவர்களுக்கு பிராமணர்கள் உதவினார்கள் என்று திருப்தி காட்டுவது ஆச்சரியமளிக்கிறது.நள்ளிரவில் இறுதி பஸ்ஸைத் தவறவிட்ட பெண்ணை வீட்டில் அழைத்து இடம் கொடுத்து பாலியல் வல்லுறவு செய்தவனை அந்தப் பெண் உதவினான் என்று பாராட்ட முடியுமா! ஆதிசைவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை அரை ஸ்மார்த்தர்களாக ஆக்கியதுடன்,கோயில்களையும் ஸ்மார்த்தக் கலப்புடையதாக மாற்றும் கபடவேடதாரிகளை புகழ்வதற்கு எதுவும் இல்லை.

இவ்வாறான சில குறைகளைத் தாண்டி ஒவ்வொரு சைவரும்,தமிழ்ச் சமூகம் குறித்த சரியான புரிதலைப் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூலாக ஆதிசைவர்கள் வரலாறு உள்ளது.